Saturday, January 23, 2010

நிம்மதி-ஒரு பார்வை

நம்மில் சிலர் என்ன இந்த‌ வாழ்க்கை!? என்று சலித்துக்கொள்வதைக் கண்கிறோம்,
மகிழ்ச்சி நம்மை விட்டு தூர விலகி நிற்கும் சமயத்தில் மட்டும் அதன் மதிப்பை நாம் ஏன் உணர முற்படுகிறௌம்...?
கடந்த கால வாழ்க்கையை நினைத்து விசனப்படுவதும், புலம்புவதும், மேலும் அதிக விருப்பங் கொள்வதுமாக உள்ள நாம் அனைவருமே நம்முடைய நிகழ்கால வாழ்க்கை இன்னும் சிறிது காலத்தில் கடந்த காலமாக மாறப்போவதைப் பற்றி ஏன் சிந்திப்பதில்லை...?

சலிப்போ-களிப்போ எதுவானாலும் அதற்கு நம் நினைப்புத்தான் காரணமாகும். நம்மைப்பற்றியே நாம் கவலைப்படத் துவங்கினால் உலகத்திலே அதிக துன்பமுள்ள மனிதன் நாம் தான் என்று நமக்குத் தோன்றும். ஆனால் தன்னைப் பற்றியே யோசிக்கிற அந்த மனோபாவம்தான் மகிழ்ச்சியான நேரத்தில் தன்னைப் போல கொடுத்து வைத்தவன் யாருமில்லை என்று நினைக்க வைக்கும்.
வாழ்க்கையில் மனம் அதிகமாக அலட்டிக் கொள்ளாமலிருக்க எல்லோரைப் பற்றியும் அவ்வப்போது சிந்திக்கிற இயல்பை வளர்க்க வேண்டும். தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் ஒரு கதையை வாசித்தாலும் அல்லது ஒரு திரைப்படத்தைப் பார்த்தாலும் அதில் கதாநாயகன் தன்னைப் போலவே கஷ்டப்படுவதாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் அந்த கதையில் வரும் வில்லன் குணாதிசயத்தோடு நடப்பவர்களாகவும் அவர்கள் இருக்கலாம். தனது சம்பந்தப்பட்ட எதையும் நியாயப்படுத்துகிற பண்பு தன்னைப் பற்றியே சிந்திப்பதன் மூலம் ஏற்படுவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நன்றாக வாழ்பவர்களை நம்மோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நம்மிடம் ஏக்கப் பெருமூச்சு வெளிப்படும். நம்மை விட பெரிய பிரச்னையை வைத்துக் கொண்டு வாழ்பவர்களோடு எண்ணிப் பார்த்தால்தான் நாம் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அலட்டிக்கொண்டிருக்கிறோமே என்பதாக நாணம் வரும்.

வாழ்க்கையில் நாம் நிம்மதியாக இருக்க சில பழக்கங்களை கைகொள்ள வேண்டும். நாம் ஓர் உருப்படியான காரியம் செய்து அதற்கு தானாக பாராட்டு கிடைத்தால் அது தன்னை ஊக்கப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அதே சமயம் நாம் எதிர்பார்த்தபடி யாரும் பாராட்டா விட்டால் அதற்காக அலட்டிக் கொள்ளாமல் பாராட்டத் தேவையான திறனாய்வு அவர்களிடம் இல்லை என்று அமைதியாக இருக்கப்பழக வேண்டும். நம்மை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதை எதிர் பார்க்கக்கூடாது. அதே சமயம் நமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதில் நாம் அக்கறையோடு இருக்க வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் நாம் ஒதுங்கியிருப்பதே நம் மரியாதையை காப்பாற்றுவதாக இருக்கும். அதற்கு இணங்கவும் மனம் குறைபடாமல் ஒதுங்கியிருக்க பழகிக்கொள்ள வேண்டும். தேவைகளை பூர்த்தி செய்து மனநிறைவை அடைய வேண்டும் என்பதை விட தேவைகளை குறைத்துக் கொண்டு மன நிறைவை அடைய பழகிக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் நாம் எப்போதும் நிம்மதியாயிருக்க கைக்கொள்ள வேண்டியவை.

Monday, January 18, 2010

மனித நேயம்

மனிதர்கள் மதத்தால் இனத்தால் நிறத்தால் மொழியால் பிரதேசத்தால் வேறுபட்டாலும், மனிதநேயம் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து கொண்டிருப்பதுதான். அதை அவர்கள் வெளிக்கொண்டுவருவது அவர் அவர்களின் ஆண்மீகம் சம்மந்தபட்ட விடயம்.
மனித நேயம் வற்றிட்ட வாழ்வு முன்னேற்ற மான வாழ்வாகாது. மனித நேயம் மங்கி வருவதன் மத்தியிலும் மங்காது ஒளிவீசும் மாமனிதர்கள் சிலர் வாழ்ந்து அழிந்தும் கொண்டும் உள்ளனர்.
மனித உயிர்கள் மதங்களின் வெற்றியில் மாய்ந்து போகிறசமயங்களில் எல்லாம் அங்கே மனிதம் காக்க ஓடோடிச் சென்று மனிதம் மடிந்து போகாமல் தடுத்தாட்கொள்ளுகின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
எம‌து முன்னோர்க‌ள் கொண்டிருந்த‌ ம‌னித‌ நேய‌ம், இப்போது உள்ள‌வ‌ர்க‌ளிட‌ம் காண‌க்கிடைப்ப‌தில்லை.மனிதத்தைத் தொலைத்துவிட்டு இவர்கள் எங்கோ பறந்து கொண்டிருக்கிறார்கள்? அடிப்படையை இழந்து விட்டு ஆகாயத்தளவு உயர்ந்தாலும் அது உயர்வாகாது.
உல‌க‌த்தில் எவ்வ‌ள‌வோ மாந்த‌ர்க‌ள் வ‌ந்தார்க‌ள், ம‌த‌ங்க‌ளாலும், சாச‌ன‌ங்க‌ளாலும் ம‌னித‌னை, ம‌னித‌ நேய‌ம் கொண்ட‌வ‌னாக‌ மாற்ற‌வேண்டும் என்னும் க‌ருப்பொருலாக்கி பாடுப‌ட்டார்க‌ள், வெற்றியும் க‌ண்டார்க‌ள், கால‌ப்போக்கில் ம‌னித‌ர்க‌ள் முன் எத்த‌னை அத்தாட்சிக‌ள் இருந்தும் கூட‌, ம‌னித‌ன் ம‌னித‌ நேயம் இன்றி அழைந்து கொண்டிருக்கிறான்.
அன்பே சிவம் என்கிறது இந்து மதம். எவர் அண்டை அயலாரின் துன்பங்களைத் தம்முடைய துன்பமாகப் பார்க்கிறாரோ அவர்தான் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவன் என்று இஸ்லாம் கூறுகிறது. அறிவு எனக்கு இருந்தாலும், ஆற்றல் பல யான் பெற்றிருந்தாலும், மறைபொருள் யாவும் நான் கற்றறிந்த போதும் மலைகளையே பெயர்த்து எடுக்கும் அளவிற்கு வமை என்னிடம் இருந்தாலும் எரிப்பதற்கோ என்னுடலைக் கையளித்த போதும் அன்பு எனக்கு இல்லையேல் நான் ஒன்றுமில்லை என்கிறது விவியம்.
ஆனால் நடைமுறையில் என்ன நடைபெறுகிறது? எத்தனை கொடூரமான குண்டு வெடிப்புகள், உலகமெங்கும் நடக்கிற சர்வதேச வன்முறை என்கிறார்களே அதற்கு மூலதனமாக இருப்பது என்ன? ம‌னித‌ நேய‌ம் இல்லாததென் வெளிப்பாடே.
இந்த உலகின் மேல் உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்குமானால் முதல் உங்களை மாற்றிக் கொள்வதற்கு நீங்கள் தயாராக வேண்டும். நான் என்னை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன் என்பதுதான் யோகா என்பது. உலகத்தை மாற்றவிரும்புகிறேன் என்று சொன்னால் அங்கு மோதல் தான் ஏற்படும். தன்னையே மேல்நிலைக்கு எடுத்துச் செல்வதுதான் ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் முழுமையான நன்மை தருவதாக இருக்கும். இதுதான் உண்மையான புரட்சி.
இனி சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் நிகழும் அனைத்துத் தீமைகளையும் வென்றெடுத்து முன்னேற்றமடைய வேண்டு மானால் பகுத்தறிவின் உச்சமான மனித நேயம் போற்றுவதால் மட்டுமே முடியும். மனித நேயமே முன்னேற்றத்திற்கான மூலதளங்களின் அடித் தளம் எனலாம்.