Friday, October 1, 2010

மற்றவர்களை குறை காணுதல்

இன்றைய இளையவர்கள் எதிர்மறையாகச் சிந்திக்கின்றார்கள். வாழ்க்கையைப் பற்றிய அவநம்பிக்கை வாதம் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கின்ற மனப்பான்மை அவர்களிடம் அதிகமாக வளர்ந்து வருகிறது.


எதிர்மறைச் சிந்தனை நம்மை அழிவுப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றுவிடும். எந்த ஒரு முயற்சியிலும் சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அவற்றையும் மீறி நல்ல விசயங்களைப் பார்ப்பது என்பது நம்மைச் சுகமாக வைத்திருக்கின்ற ஒரு செய்தி. எல்லாவற்றிலும் தேடிப்பிடித்தாவது குறையைச் சொல்வது என்பது நாளடைவில் நம் உடல்நலத்தைக் கூடப் பாதிக்கும். காரணம், நம் மனதிற்கும் உடலுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது. மனம் சரியாக இல்லாவிட்டால் உடல் ஒத்துழைக்க மறுக்கின்றது. மனதில் மகிழ்ச்சி இருந்தால், பசியைக்கூட மறந்துவிடுகிறோம். ஆனால், தொடர்ந்து எதிர்மறையாகச் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் உடலில் அதிக அமிலம் சுரக்கின்றது.முகத்தில் சுருக்கம், உடல் தளர்வு ஏற்படுகிறது. எனவே நாம் வாழ்க்கையை நம்பிக்கையோடு பார்க்க வேண்டும்.


இன்னொரு மனப்பான்மை இருக்கின்றது. எதைப் பார்த்தாலும் இதை விடச் சிறந்தது ஏற்கனவே எனக்குத் தெரியும் என்று சொல்லிக் காட்டுகிற மனப்பான்மை.அடுத்தவர்களை மட்டம் தட்டுவதற்கான ஒரு உபாயமாக இருக்கிறது. ஆனால், நம்மிடம் எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம். நாட்டின் ஜனாதிபதி என்ன செய்ய வேண்டுமென்பதை ஒரு பள்ளி ஆசிரியர் (உதாரணத்திற்காகத்தான்) விலாவாரியாக சொல்கிறார். ஆனால் அவர் பள்ளி ஆசிரியராக என்ன செய்ய வேண்டுமென்பதை மறந்துவிட்டுப் ஜனாதிபதிக்கு அறிவுரை கூறுகிறார்!


நிறையப் பேர் அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் கடமைகளை மட்டும் செளகரியமாக மறந்து போகிறார்கள். எங்கேயாவது ஏதாவது பிசகு நடந்தால்கூட, அதைப் பெரிது படுத்துகிறார்கள். பூதக் கண்ணாடியால் பூங்கொத்துகளைப் பார்க்கிறார்கள். எங்கே குற்றம் நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். யாரை வேண்டுமானாலும் எளிதில் குறை சொல்லலாம் என்று நினைக்கிறார்கள்.


வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது. கூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடுதான் பறக்கின்றன. இன்று நாள் முழுவதும் நாம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனஇளைஞர்கள் அனைவரும் புன்னகையோடு உலகத்தைப் பார்த்தால் நிச்சயமாக அவர்கள்மீது பூக்கள் சொரியும்.

Saturday, July 10, 2010

குழந்தை வளர்ப்பு

நம் வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதில் நம் பெற்றோர்களின் பங்கு என்னவென்பது எமக்கு நன்றாகவே தெரிந்த விடயம். அத்துடன் பெற்றோர்கர்களின் உடன் பிறந்தவர்களின் பிள்ளைகள், மற்றும் எமது அயல் வீட்டார்களின் பிள்ளைகள். அவர்கள் எப்படி வளர்த்தெடுக்கப்பட்டனர். சமூகத்தின் அவர்களின் தற்கால நிலைக்கான காரணம் அவர்களின் வளர்ப்புதான் என்று நாம் கோடு போட்டு காட்டுவது வழக்கம்.

கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக நல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளை நல்ல படியாக வளர்க்க முடியும். சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவு என்ற ரீதியில் இருப்பார்கள்.

கணவன் மனைவிக்கு இடையே பெரும் மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும் தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும், அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில் பெருமை.

சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயே மனைவியை திட்டுவது, அடிப்பது, சண்டையிடுவது ஆகியவற்றை செய்வார்கள். மிக கீழ்த்தரமான வார்த்தைகளையும் சிலர் ப்ரயோகிப்பார்கள். இது பிள்ளையின் மனதில் தாயின் மரியாதையை குறைத்து விடும்.

மேலும் ஒரு படி மேலே போய் சில தகப்பன்கள் பிள்ளைகளை ஒற்றனைப் போல் வைத்திருப்பார்கள். அதாவது,” நான் இல்லாத போது அம்மா என்ன செய்யறான்னு” எனக்கு சொல்லணும். சொன்னாநான் சாக்லேட் வாங்கித் தருவேன். என்று சொல்வார்கள். இது மிக மிகத் தவறு. இப்படி பட்ட மனநிலையில் வரும் பிள்ளையின் எதிர் காலம் என்னவாகும்.
மனைவியும் சில தவறுகளைச் செய்கிறாள். பிள்ளையின் மீது இருக்கும் பாசத்தினால் சில சமயங்களில் பிள்ளையை காக்க தகப்பனிடம் சில விடயங்களை சொல்லாமல் இருந்து விடுவாள்.
”அம்மாவுக்குத் தெரியும். அம்மா திட்ட மாட்டாங்க. அப்பா கிட்ட சொன்னா தோல உரிச்சிடுவாருன்னுஅம்மா அப்பா கிட்டயும் சொல்ல மாட்டாங்கன்னு” சொல்லும் பிள்ளை நல்லதாக வளர்க்கப்பட்ட பிள்ளையல்ல”.
சில பெண்கள் பிள்ளையிடன் கடைக்குச் செல்லும் போது, கணவன் திட்டுவார் என்று தெரிந்தும் ஒரு பொருள் தான் ஆசைப் பட்டதை வாங்கியிருப்பார். பிள்ளை போய் போட்டுகொடுத்துவிட்டால்!! “இந்தா இந்த சாக்லேட் வெச்சுக்கோ. அப்பா கிட்ட இதெல்லாம் சொல்லக்கூடாது!” என்று சொன்னால் நாளை அந்தக் குழந்தை நீ செஞ்சதை நான் சொல்லவில்லை, நான் செய்வதை நீயும் சொல்லாதே” என்று பிளாக் மெயில் செய்ய ஏதுவாகும்.
மற்ற விடயத்தில் எப்படியோ? கணவன் மனைவி இருவரும் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் ஒத்த கருத்து உடையவர்களாக இருந்தால் தான் வளரும் தலைமுறை நல்ல குடிமகன்களாக, அன்னை தந்தையின் பால் மரியாதை, பாசம் கொண்ட தலைமுறையாக உருவாகும்.

உனக்கு அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா என்கின்ற கேள்வியே தவறு. அம்மா, அப்பா இல்லாமல்பிள்ளை இல்லை. ஆகவே இருவரும் ஒன்று எனும் எண்ணம் பிள்ளைக்கு வரவேண்டும்.
அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிக்கொள்ளலாம் என்றோ அப்பாவுக்கு தெரியாமல்அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிடலாம் என்றோ குழந்தை நடந்துகொள்கிறது என்றால் இருவரும்சேர்ந்து சரியாக வளர்க்க வில்லை என்பது தான் பொருள்.

Friday, March 26, 2010

உங்களில் சிறந்தவர் யார்?

ஒரு முறை நபி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னைச் சூழ்ந்திருந்த ஸஹாபாக்களை நோக்கி,"உங்களில் சிறந்தவர் யார் என்று தெரியுமா?" என வினவியபோது, ஸஹாபாக்கள் அள்ளாஹ்வும் அவனுடைய திருத் துதருமே அறிவார்கள் எனப்பதிலளித்தனர். அதற்கு, நபி (ஸல்)அவர்கள் "அல்_குர்ஆனை தானும் கற்றுப் பிறருக்கும் கற்றுக்கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்" என அழகிய திருவாய் திறந்து நவின்றுள்ளார்கள்.

எனவே நபி(ஸல்)அவர்கள் இவ்வார்த்தையை நவின்றதன் காரணம்; அல்_குர் ஆனது,ம னித வாழ்வின் கட்டவிழாத பொக்கிஷமாகத் திகழ்ந்து இஸ்லாமிய வாழ்க்கை முன்னோடியாகப் பரிணமிக்கின்றது என்றால் மிகையாகாது. அல்_குர்ஆன்; மனிதனைப் படைத்த இறைவனைப் பற்றி அறிமுகப் படுத்தியது மட்டுமல்லாது, அவனது தூதருக்கும் வழிப்படுமாறும் ஏவுகிறது ஏன்?... மனிதனை உயர்ந்த வழியில் இட்டுச் செல்ல,வாழ்க்கையின் அனைத்து விடயங்களையும் தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது.(வாழ்க்கைமுறை,திருமணம்,தலாக்,இத்தா,ஒழுக்கமுறை,வெற்றியின் வளி,நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்,.....), மற்றும் பல்துறை அறிவான(விவசாயம்,புவியியல்,வானவியல், சாஸ்திரவியல்)போன்ற இனோரன்ன அறிவுப்பொக்கிஷங்களும் செரிந்து காணப்பட்டதால் தான் இன்றைய பல்துறைகளனணத்தும் அல்-குர்ஆனை முன்னோடியாக வைத்து விண்னணத் தொடுமளவிற்கு முன்னேறிச் சென்றுள்ளமை காணமுடிகிறது.

மற்றும் பல் துறைசார்ந்த அண்ணியர்கள் தங்கள் ஈடுபாடுகளை அல்-குர்ஆன் கூறிய மையக் கருத்தை வைத்து ஆழ்ந்தது செயற்பட்டபோது இஸ்லாமிய மார்க்கமே உண்மையானது என்று பலரும் உடனுக்குடன் இஸ்லாத்தைத் தழுவியது, தம் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஏடாக அமைந்துள்ளது என்றால் ஏன்? எம் முஸ்லிம் சமுதாயம் அல்-குர் ஆனை சிறந்த முறையில் கற்பதனை அசிரத்தையோடு ஈடுபடுகின்றது. இதற்குக் காரணம், தம் பெற்றோர்களிடம் மார்க்க அறிவும் அதன் ஆளமும் மிகக் குறைவானதே எனலாம்.மேலும் பெரியவர்கள் தெரியாத விடயங்களை கற்றுக்கொள்வோம் என்ற

ஆர்வமின்மையும் ,தாழ்வுச்சிக்கலுமே முதற்காரணம்.

ஆம் பிற்பட்ட காலப் பகுதியில் எழுத்தறிவு ஏற்பட்ட அரபு சமுதாயத்தை ஓர் கணம் எட்டிப் பார்த்தால்; அவர்கள் மிகவும் குறுகிய காலப் பகுதியில் கல்வி வளர்ச்சியடைந்துள்ளார்கள். மேலும் எழுதப் படிக்கத்தெரியாத வயது முதிர்ந்த பெற்றோர்கள் கூட தான் கல்வி என்னும் மகுடத்தை எம்மில் சூட்டினால்தான் தாம் குர்ஆனை விளங்கி சிறந்த சமுதாயத்தை உருவாக்கி எம் இம்மை மறுமை வாழ்க்கையை சீருடன் அமைக்க முடியும் என்று கருதி தன் பச்சிளங் குழந்தைகளை பராமரிப்பில் விட்டு விட்டு கல்வி கற்று அல்-குர் ஆனை விளங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏன் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் எம் பெர்றோர்களுக்கு இல்லாததோடு, தம் இளம் பராயத்தினரையும் ஊக்கு விக்கத் தவறுகின்றனர். இவர்கள் தாம்; உலக வாழ்க்கைக்கு அடிமையாகி அதில்

விலைபோகின்றனர்.இனியாவது எம் முஸ்லிம் சமூகம் சீர் பெற்று எழும்ப இறைவன் அருள் புரிவானாக!......ஆமீன்.

Sunday, February 7, 2010

மற்றவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்

இரக்கம் காட்டுபவர்கள் மீது அல்லாஹ் இரக்கம் காட்டுகின்றான். பூமியிலுள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். வானத்திலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்." (அபூதாவூத், திர்மிதி)

நாம் எமக்குள் இரக்கம் காட்டும் விசயத்தில் அதிகம் கவனம் எடுப்பது குறைவு. எம்மைச் சுற்றி நடக்கு அனைத்து அனியாயங்களுக்கும் இர‌க்கத் தன்மை இன்றி நாம் நடந்துகொள்வதுதான் பிரதானமான காரணம். நம்பில் ஒரு சிலர் தங்களுடைய‌ குழந்தைகளை உயர்வாக மற்றவர்கள் கருத வேண்டும் என்ற உள் நோக்குடன் வேறு குழந்தைகளை இழிவு படுத்தியும் வெளிப்படையாக பேசுவதை கண்டுள்ளோம். உன்மையில் இது இறைவனால் வெறுக்கத்தக்க செயல் என்பதை அவர்கள் உணரவேண்டும். அத்துடன் பிறர் பிள்ளையை ஊட்டி வளர்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்ற என்னம் எமக்குள் விதைக்கப்படவேண்டும்.

நம்மில் பலருக்கு கொடுத்தால் குறைந்துவிடும் என்ற ஒரு வீண் பயம் அவர்களை ஆட்டிபடைப்பதுவும் உண்டு. அதனால்தான் ஒரு சில பெண்கள் கனவனின் பெற்றோர்களுக்குகூட தன் கனவனின் உழைப்பிலுருந்து கொடுப்படிதில் கஞஞத்தனம் காட்டுகின்றனர். தன் பெற்றோறைப் பார்பதுபோல் கனவனின் தாய் தந்தையை கவனிப்பதற்கு பின் நிற்கின்றனர். இதற்கு காரணம் இரக்கத்தனமை இல்லாமையே.

ரஸூல் (ஸல்) அவர்களிடம் "மக்களை அதிகமாக சுவனத்தில் நுழைவிக்கின்ற விடயம் எது என்று கேட்கப் பட்டது. அதற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் தக்வாவும் நற் பண்புகளுமாகும்" என்றார்கள். (திர்மிதி)

எமக்கு நற் பண்பும் தக்வாவும் இருக்கின்றனவா என்று எம்மை நாம் கேள்வி கேட்டால் என்ன நடக்கும். ஒரு சிலர் கேட்காமலே விட்டு விடுவோம் "கேட்டால்தானே பிரச்சினை". ஒரு தக்வா உள்ள மனிதனாக மாறுவதற்கு எமக்குள் அளவுகடந்த ஆசை இருந்தும், அதக்கான முயற்சி எடுப்பதில்தான் பின்னுக்கு நிற்கிறோம். இதற்கு காரணம் எமது மன இச்சைக்கு நாம் நடிமைப்பட்டு விடுவதனால்தான்.

எந்தவொரு சிறிய நன்மையையும் இழிவாகக் கருதி விடாதீர்கள். ஒரு சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகைப்பதும் ஸதகாவாகும். இந்த உலகத்தில் கஸ்டம் இல்லாமல் எவரும் இல்லை. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவிதமான கவலைகளுடனும் கஸ்டத்துடனும்தான் வாழ்கிறான். என்ன கஸ்டம், அல்லது மகிழ்ச்சி வந்தாலும், ஒரு சில மணி நிமிடங்கள்தான், அதுவும் எம்மை கடந்துவிடும் என்ற உள் உணர்வு எமக்கு பலமாக இருக்க வேண்டும், அப்போதுதான் நாங்கள் மற்றவர்களின் மனம் புன்படாதவாறு பழக கற்றுக்கொள்ளலாம்.

Saturday, January 23, 2010

நிம்மதி-ஒரு பார்வை

நம்மில் சிலர் என்ன இந்த‌ வாழ்க்கை!? என்று சலித்துக்கொள்வதைக் கண்கிறோம்,
மகிழ்ச்சி நம்மை விட்டு தூர விலகி நிற்கும் சமயத்தில் மட்டும் அதன் மதிப்பை நாம் ஏன் உணர முற்படுகிறௌம்...?
கடந்த கால வாழ்க்கையை நினைத்து விசனப்படுவதும், புலம்புவதும், மேலும் அதிக விருப்பங் கொள்வதுமாக உள்ள நாம் அனைவருமே நம்முடைய நிகழ்கால வாழ்க்கை இன்னும் சிறிது காலத்தில் கடந்த காலமாக மாறப்போவதைப் பற்றி ஏன் சிந்திப்பதில்லை...?

சலிப்போ-களிப்போ எதுவானாலும் அதற்கு நம் நினைப்புத்தான் காரணமாகும். நம்மைப்பற்றியே நாம் கவலைப்படத் துவங்கினால் உலகத்திலே அதிக துன்பமுள்ள மனிதன் நாம் தான் என்று நமக்குத் தோன்றும். ஆனால் தன்னைப் பற்றியே யோசிக்கிற அந்த மனோபாவம்தான் மகிழ்ச்சியான நேரத்தில் தன்னைப் போல கொடுத்து வைத்தவன் யாருமில்லை என்று நினைக்க வைக்கும்.
வாழ்க்கையில் மனம் அதிகமாக அலட்டிக் கொள்ளாமலிருக்க எல்லோரைப் பற்றியும் அவ்வப்போது சிந்திக்கிற இயல்பை வளர்க்க வேண்டும். தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் ஒரு கதையை வாசித்தாலும் அல்லது ஒரு திரைப்படத்தைப் பார்த்தாலும் அதில் கதாநாயகன் தன்னைப் போலவே கஷ்டப்படுவதாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் அந்த கதையில் வரும் வில்லன் குணாதிசயத்தோடு நடப்பவர்களாகவும் அவர்கள் இருக்கலாம். தனது சம்பந்தப்பட்ட எதையும் நியாயப்படுத்துகிற பண்பு தன்னைப் பற்றியே சிந்திப்பதன் மூலம் ஏற்படுவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நன்றாக வாழ்பவர்களை நம்மோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நம்மிடம் ஏக்கப் பெருமூச்சு வெளிப்படும். நம்மை விட பெரிய பிரச்னையை வைத்துக் கொண்டு வாழ்பவர்களோடு எண்ணிப் பார்த்தால்தான் நாம் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அலட்டிக்கொண்டிருக்கிறோமே என்பதாக நாணம் வரும்.

வாழ்க்கையில் நாம் நிம்மதியாக இருக்க சில பழக்கங்களை கைகொள்ள வேண்டும். நாம் ஓர் உருப்படியான காரியம் செய்து அதற்கு தானாக பாராட்டு கிடைத்தால் அது தன்னை ஊக்கப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அதே சமயம் நாம் எதிர்பார்த்தபடி யாரும் பாராட்டா விட்டால் அதற்காக அலட்டிக் கொள்ளாமல் பாராட்டத் தேவையான திறனாய்வு அவர்களிடம் இல்லை என்று அமைதியாக இருக்கப்பழக வேண்டும். நம்மை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதை எதிர் பார்க்கக்கூடாது. அதே சமயம் நமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதில் நாம் அக்கறையோடு இருக்க வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் நாம் ஒதுங்கியிருப்பதே நம் மரியாதையை காப்பாற்றுவதாக இருக்கும். அதற்கு இணங்கவும் மனம் குறைபடாமல் ஒதுங்கியிருக்க பழகிக்கொள்ள வேண்டும். தேவைகளை பூர்த்தி செய்து மனநிறைவை அடைய வேண்டும் என்பதை விட தேவைகளை குறைத்துக் கொண்டு மன நிறைவை அடைய பழகிக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் நாம் எப்போதும் நிம்மதியாயிருக்க கைக்கொள்ள வேண்டியவை.

Monday, January 18, 2010

மனித நேயம்

மனிதர்கள் மதத்தால் இனத்தால் நிறத்தால் மொழியால் பிரதேசத்தால் வேறுபட்டாலும், மனிதநேயம் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து கொண்டிருப்பதுதான். அதை அவர்கள் வெளிக்கொண்டுவருவது அவர் அவர்களின் ஆண்மீகம் சம்மந்தபட்ட விடயம்.
மனித நேயம் வற்றிட்ட வாழ்வு முன்னேற்ற மான வாழ்வாகாது. மனித நேயம் மங்கி வருவதன் மத்தியிலும் மங்காது ஒளிவீசும் மாமனிதர்கள் சிலர் வாழ்ந்து அழிந்தும் கொண்டும் உள்ளனர்.
மனித உயிர்கள் மதங்களின் வெற்றியில் மாய்ந்து போகிறசமயங்களில் எல்லாம் அங்கே மனிதம் காக்க ஓடோடிச் சென்று மனிதம் மடிந்து போகாமல் தடுத்தாட்கொள்ளுகின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
எம‌து முன்னோர்க‌ள் கொண்டிருந்த‌ ம‌னித‌ நேய‌ம், இப்போது உள்ள‌வ‌ர்க‌ளிட‌ம் காண‌க்கிடைப்ப‌தில்லை.மனிதத்தைத் தொலைத்துவிட்டு இவர்கள் எங்கோ பறந்து கொண்டிருக்கிறார்கள்? அடிப்படையை இழந்து விட்டு ஆகாயத்தளவு உயர்ந்தாலும் அது உயர்வாகாது.
உல‌க‌த்தில் எவ்வ‌ள‌வோ மாந்த‌ர்க‌ள் வ‌ந்தார்க‌ள், ம‌த‌ங்க‌ளாலும், சாச‌ன‌ங்க‌ளாலும் ம‌னித‌னை, ம‌னித‌ நேய‌ம் கொண்ட‌வ‌னாக‌ மாற்ற‌வேண்டும் என்னும் க‌ருப்பொருலாக்கி பாடுப‌ட்டார்க‌ள், வெற்றியும் க‌ண்டார்க‌ள், கால‌ப்போக்கில் ம‌னித‌ர்க‌ள் முன் எத்த‌னை அத்தாட்சிக‌ள் இருந்தும் கூட‌, ம‌னித‌ன் ம‌னித‌ நேயம் இன்றி அழைந்து கொண்டிருக்கிறான்.
அன்பே சிவம் என்கிறது இந்து மதம். எவர் அண்டை அயலாரின் துன்பங்களைத் தம்முடைய துன்பமாகப் பார்க்கிறாரோ அவர்தான் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவன் என்று இஸ்லாம் கூறுகிறது. அறிவு எனக்கு இருந்தாலும், ஆற்றல் பல யான் பெற்றிருந்தாலும், மறைபொருள் யாவும் நான் கற்றறிந்த போதும் மலைகளையே பெயர்த்து எடுக்கும் அளவிற்கு வமை என்னிடம் இருந்தாலும் எரிப்பதற்கோ என்னுடலைக் கையளித்த போதும் அன்பு எனக்கு இல்லையேல் நான் ஒன்றுமில்லை என்கிறது விவியம்.
ஆனால் நடைமுறையில் என்ன நடைபெறுகிறது? எத்தனை கொடூரமான குண்டு வெடிப்புகள், உலகமெங்கும் நடக்கிற சர்வதேச வன்முறை என்கிறார்களே அதற்கு மூலதனமாக இருப்பது என்ன? ம‌னித‌ நேய‌ம் இல்லாததென் வெளிப்பாடே.
இந்த உலகின் மேல் உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்குமானால் முதல் உங்களை மாற்றிக் கொள்வதற்கு நீங்கள் தயாராக வேண்டும். நான் என்னை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன் என்பதுதான் யோகா என்பது. உலகத்தை மாற்றவிரும்புகிறேன் என்று சொன்னால் அங்கு மோதல் தான் ஏற்படும். தன்னையே மேல்நிலைக்கு எடுத்துச் செல்வதுதான் ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் முழுமையான நன்மை தருவதாக இருக்கும். இதுதான் உண்மையான புரட்சி.
இனி சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் நிகழும் அனைத்துத் தீமைகளையும் வென்றெடுத்து முன்னேற்றமடைய வேண்டு மானால் பகுத்தறிவின் உச்சமான மனித நேயம் போற்றுவதால் மட்டுமே முடியும். மனித நேயமே முன்னேற்றத்திற்கான மூலதளங்களின் அடித் தளம் எனலாம்.